கம்முனு கிட - தமிழ் இலக்கிய சொல்லாடல்

"கம்முனு கிட" - சென்னைவாசிகளின் பேச்சு வழக்கில் இயல்பாய் பயன்படுத்தப்படும் சொல்லாடல். அன்றாடம் பயன்படுத்தப்படும் இந்த சொல்லாடலில் இலக்கியம் நிறைந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் இது நல்ல இலக்கிய சொற்கள் நிறைந்த சொல்லாடல்.
முதலில் "கம்" என்ற சொல்லை கவனிப்போம். கம் என்னும் சொல் ஒரு சொல் பல பொருள்கள் தரும் சொல்லாகும். அகநானூறு, நற்றிணை, போன்ற இலக்கியங்களில் இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கம் என்னும் சொல் அமைதி, மணம், காற்று, நீர்,உயிர், வெண்மை போன்ற வெவ்வேறு பொருள்பட இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இந்த சொல்லை இன்னும் சற்று ஆராய்வோம். இச்சொல்லின் ஈற்றெழுத்து "ம்" என்னும் மெய்யெழுத்து. மெய்யெழுத்துகள் பதினெட்டில் "ம்" என்னும் எழுத்தை உச்சரிக்கையில் மட்டுமே உதடுகள் ஒட்டும். அதே போல் நாம் பேசாமல் மௌனம் கொண்டிருக்கையில் நம் உதடுகள் ஒட்டியிருக்கும். "ம்" என்று கூறும் பொழுது நம் நாடி நரம்புகள் அமைதியுறும். ஓம் என்று கூறும் பொழுது மனம் அமைதியுறும் என்பார்கள். இந்த ஓம் என்பதில் "ம்" என்பதை நீக்கி விட்டுப் பாருங்கள், வெறும் ஓ என்னும் ஓசை மட்டுமே மிஞ்சும். அமைதி மிஞ்சாது. இவற்றை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கையில் நம் முன்னோர்களின் அறிவுத்திறன் கண்டு வியக்காமல் இருக்க இயலவில்லை.
அமைதி என்னும் பொருள்படும் வேறு சொற்களான மௌனம், சாந்தம், நிசப்தம் மோனம் போன்ற சொற்கள் வட மொழி சொற்களில் இருந்து பெற்றிருப்பினும் நம் மொழியில் பயன்படுத்தும் போது "ம்" என்னும் ஈற்றெழுத்துடனே பயன்படுத்துகிறோம். இதில் அமைதி என்னும் சொல் விதிவிலக்கு.

அடுத்து கம் என்னும் சொல்லின் வெவ்வேறு பொருள்களை சற்று உற்று நோக்குவோம். நல்ல மணம் நமக்கு ஒருவித அமைதியை அளிக்கும். காற்றும், நீரும் வெம்மையை நீக்கி நம்மை அமைதியுறச் செய்யும். வெண்மை நிறம் இன்றளவும் அமைதியைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். இவற்றில் எல்லாம் ஓர் ஒற்றுமை இருப்பதை உணர்கிறேன்.
இரண்டாவதாக உள்ள கிட என்னும் சொல்லை இப்பொழுது கவனிப்போம். கிட என்னும் சொல்லுக்கு படு, இரு என்னும் இரு பொருள்கள் உள்ளன. கிடக்கை என்னும் சொல்லுக்கு படுக்கை என்று பொருள். கிட, கிடக்கை என்பவை நாம் இன்றளவும் பயன்படுத்துகின்ற நல்ல இலக்கிய சொற்கள்.
"அமைதியா இரு" என்று கூறுவதை விட "கம்முனு கிட" என்பது நல்ல தமிழ் சொல்லாடலாக இருப்பதையே உணர்கிறேன். சென்னை தமிழிலும் உண்டு இலக்கிய வளமை.
தமிழ் மொழி நம் வாழ்வியலோடு ஒன்றிய ஒன்று. ஆய்ந்து அறிவதற்கு ஆயிரம் ஆயிரம் உண்டு.
(பதிவின் நீளம் கருதி தற்சமயம் கம்முனு கிடந்துக்கிறேன்) 😂😂

கருத்தாக்கம் & எழுத்தாக்கம்
கார்த்திகேயன் பார்கவிதை

Comments