இன்று ஒரு செய்யுள் அறிவோம் - 1

நற்றிணை எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. பல்வேறு புலவர்களால் பாடப் பட்ட 400 பாடல்களின் தொகுப்பே நற்றிணை நூலாகும். இதனால் இதற்கு நற்றிணை நானூறு என்றொரு பெயரும் உண்டு. ஐந்திணைகளில் வாழ்ந்த தலைவன், தலைவி பற்றிய அகநூல் நற்றிணை. கபிலர், நக்கீரர், பரணர், ஒளவையார், இளங்கீரனார் போன்ற பல்வேறு புலவர்களின் பாடல்கள் நற்றிணையில் உள்ளன.

இன்றைய தமிழ் செய்யுளாக கபிலர் அவர்கள் இயற்றிய நற்றிணையின் முதல் பாடலை தேர்ந்தெடுத்துள்ளேன்.

செய்யுள் :


நின்ற சொல்லர் நீடு தோறு இனியர்
என்றும் என்தோள் பிரிபு அறியலரே ,
தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீம் தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை.
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந் தரளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உருபவோ செல்பறியலரே .

                                   -  நற்றிணை -  1;

இயற்றியவர் :  கபிலர்

திணை : குறிஞ்சித் திணை



விளக்கம் :

நின்ற சொல்லர் = சொன்ன சொல் தவறாதவர்

நீடு தோறு இனியர் = மிகவும் இனிமையானவர்

என்றும் என்தோள் பிரிபு அறியலரே  = என்றும் என்னைப் பிரிய நினையாதவர்

தண் = குளிர்ச்சி

தாது = மகரந்தம்

ஊதி= உறிஞ்சி

மீமிசை = உயர்ந்த இடத்தில்

சாந்தில் = சந்தன மரத்தில்

தொடுத்த தீம் தேன் போல = சேர்த்து வைத்த சுவையான தேனைப் போல

புரைய மன்ற = நிச்சயமாக உயர்ந்தது

கேண்மை =  நட்பு

புரையோர் கேண்மை = உயர்ந்த அவனின் நட்பு அல்லது உறவு

நீர் இன்று அமையா உலகம் போலத் = நீர் இல்லாமல் அமையாத உலகம் போல

தம் இன்று = அவன் இன்றி

அமையா நம் நயந்தருளி = அமையாத நம்முடைய நன்மையைக் கருதி, அருள் செய்து

நுதல் = நெற்றி

நறு நுதல் பசத்தல் அஞ்சிச் = என் நெற்றி பசலை நிறம் அடையும் என்று அஞ்சி

சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே! = என்னை பிரியும் அந்த சிறிய செயலை  செய்வானா ? அவனுக்கு அதைச் செய்யத் தெரியாது

சந்தன மரத்தில் உள்ள தேன் போல அவன் காதல் உயர்ந்தது. கெட்டுப் போகாதது.

பதவுரை :

தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வானோ என பயந்த தோழி அதை தலைவியிடம் கூறியபோது, தலைவி அவளுக்கு கூறும் பதிலாக இதை எழுதியுள்ளார் கபிலர்.

" தோழி! என் தலைவர் எப்போதும் நிலைபெற்று விளங்கும் சொற்களை உரைப்பவர்.எல்லாக் காலத்திலும் இனிமை திகழ விளங்குபவர். எத்தன்மையினும் என்னைப் பிரியாதவர். தாமரை மலரில் உள்ள குளிர்ந்த மகரந்தத் தாதுக்களை நுகர்ந்து சந்தன மரத்தில் சேர்க்கும் தேன் கூடு போன்று அவருடைய பழக்கமானது இனிமையும் நறுமணமும் கொண்டு விளங்கும். நீர் இன்றி உலகம் இல்லாதது போன்று நம்மையன்றி வேறு எதுவும் காணாதவராகத் தலைவர் விளங்குபவர் . அவர் என்னுடைய நெற்றி பசலை கொண்டு வருந்துமாறு பிரிந்து செல்லுதற்கு அறியாதவர் .

Comments