மழை மேகமே இவ்வழி வா

நின்னை சில வரங்கள் கேட்பேன்
விண்ணே
நின்னை சில வரங்கள் கேட்பேன்

சேர நாடுதனை நீர்ப்பற்றிக் கொண்டது
சோழநாடுதனை நீர்ப்பற்றிக் கொண்டது
பாண்டியரின் தீப்பற்றிய நிலம்தனை
நீர்ப்பற்றிக் கொள்வது எப்போது?
பற்றோடு பற்றிக் கொள்வது எப்போது?

வானமே
எழில்மிகு தேசத்தில்
பொழிந்தது போதும்
உயிர்களின் வலிதனை நீக்க
வளிதனை செலுத்தி
எழிலிதனை இவ்வழி அனுப்பு

வானமே நீ பொய்ப்பின்
பொய்யாக் குலக்கொடியாம்
வையை பொய்ப்பது மெய்யே

வையை மெய்தனை உயிர்ப்பிக்க
பெயலே பொய்யாமல் பெய்வாயாக

அழிதுளி இல்லாமல்
அளவறிந்து  அளிப்பாயாக வானமே
அளவறிந்து அளிப்பாயாக

- கார்த்திகேயன் பார்கவிதை

எழிலி = மழை மேகம்
பெயல்= மழை
அழிதுளி = கடும் மழை

#Save_Kerala

Comments